சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக தமிழர் ஹரிஹர அருண் சோமசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார் !உலகளவில் தமிழர்கள் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறார்கள். உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தும் பல உயர்ந்த நிறுவனங்களில் நம் தமிழர்கள் தான் உயர் பதவியை அலங்கரிக்கிறார்கள். உலகம் முழுக்க பல முக்கிய நிறுவனங்களிலும், அரசு பதவிகளிலும் கூட தமிழர்கள் தான் தலைமையை அலங்கரிக்கிறார்கள். அமெரிக்க துணை ஜனாதிபதிக்கே நம் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் தமிழருக்கு மேலும் ஒரு பெரும் அங்கீகாரமாக சர்வேதச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நம் தமிழர் ஹரிஹர அருண் சோமசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 


உலக நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஐநா சபை சார்பாக, உலக நாடுகளுக்கென்று பொதுவாக சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. நெதர்லாந்தின் தலைநகரான ஹேக்கில் இருந்து இந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நீதிமன்றத்தில் உலக நாடுகளுக்கு பொதுவான சட்ட ஆலோசனைகள் வழங்கவும், மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஐந்து பேர் அடங்கிய, சட்ட வல்லுநர் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் ஒருவராக, நம் தமிழகத்தை சேர்ந்த,  சர்வதேச வழக்கறிஞராக இயங்கி வரும், ஹரிஹர அருண் சோமசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர். 

இந்திய குற்றவியல் வழக்கறிஞரான இவர் சர்வதேச நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். சென்னை நீதிமன்றத்தின் வரலாற்றில்
மிக இளம் வயதில் குற்றவியல் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டு, சாதனை படைத்தவர். இவரது தந்தை S.கோமதி நாயகம் தமிழக நீதித்துறையில் மிகவும் புகழ்பெற்ற, மூத்த வழக்கறிஞர் ஆவார். இவரது தாயார் S.G. ராஜநந்தினி புகழ்பெற்ற தொழிலதிபராவார். இவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர், எழுத்தாளர் மீ. பா. சோமசுந்தரத்தின் மகள் வழி பேரனாவார். 

தென்காசி செங்கோட்டையை சேர்ந்த இவர் சர்வதேச சட்டம் படித்துள்ளார். இங்கிலாந்தில் பல வழக்குகளில் பங்கேற்று சிறப்பான வழக்கறிஞர் எனப்பெயர் பெற்றவர். சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய இரண்டாண்டுகளில் பல சிக்கலான வழக்குகளில் பங்கேற்று தன் வாத்தத்திறமையால் வெற்றி பெற்றதோடு, நீதிபதிகளிடமும் மிகுந்த  பெயர் பெற்றுள்ளார்.  
 

சத்வதேச நீதி மன்ற சட்ட ஆலோசனை குழுவில், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐந்து பேரில், ஆசியா நாடுகள் அனைத்திலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர்  கூறியது...

ஆசியா முழுமைக்குமாக, தமிழகத்திலிருந்து ஒரே ஒருத்தராக நான் இந்த குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த பெருமை. வழக்கமாக வயதில் மூத்த வழக்கறிஞர்களை தேடித்தான் இம்மாதிரியான வாய்ப்புகள் வரும் ஆனால் இம்முறை இளம் வயதிலேயே, என்னை இந்த வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. எனது பணிகாலத்தில் நம் இந்திய மண்ணுக்கும், நம் தாய் தமிழ் மொழிக்கும் பெருமை தேடி தரும்படி, நம் புகழை உலகறியும்படி செய்வேன் என உறுதி கூறுகிறேன் என்றார்.


No comments