"மறக்குமா நெஞ்சம்’ – விமர்சனம்

பள்ளிப் பருவ நண்பர்களான ரக்‌ஷன் மற்றும் தீனா ஒரே இடத்தில் தங்கி இருக்கிறார்கள். நாயகனான ரக்‌ஷன் தன் பள்ளி வாழ்க்கையை மிகவும் மிஸ் செய்வதாக உணர்கிறார். இதனால் பழைய நண்பர்களை சந்திப்பதற்காக ரீ யூனியன் வைக்க திட்டமிடுகிறார். ஆனால், நண்பர்கள் யாரும் இதை ஏற்கவில்லை.

இந்த நிலையில், 2008-ல் இவர்கள் எழுதிய தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அப்போது வழக்கு தொடரப்படுகிறது. இதையடுத்து 10 வருடங்கள் கழித்து அந்த மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது எனவும் 2008-ல் படித்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து மூன்று மாதங்கள் பாடங்களை கற்றுக் கொண்டு தேர்வு எழுத வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியும், ஆனந்தமும் படுகின்றனர்.

இதற்கிடையே சிறு வயது முதல் பள்ளி தோழி மலினாவை ஒரு தலையாக காதலித்த ரக்‌ஷன் கடைசி வரை அவரிடம் தன் காதலை
கூறாமலேயே இருந்து விடுகிறார். தற்பொழுது இந்தத் தீர்ப்பு வெளியானதை அடுத்து ஆனந்தமாகும் அவர் எப்படியாவது தன் காதலை இந்த தடவையாவது பள்ளிக்கு சென்று சொல்லி விட வேண்டும் என நினைக்கிறார்.இறுதியில் ரக்‌ஷன் தன் காதலை வெளிப்படுத்தினாரா? மாணவர்களின் தேர்வு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.நாயகன் ரக்‌ஷன் பள்ளிப் பருவ மாணவனாக வரும் காட்சிகளில் கவர்கிறார். இவர் நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.நாயகி மலினா வழக்கமான கதாநாயகியாக வந்து சென்றிருக்கிறார். இவருக்கு அதிகம் வேலை இல்லை. தீனாவின் காமெடி கைத்தட்டல் பெறுகிறது. முனீஷ்காந்த், ஸ்வேதா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

நம் பள்ளிப்பருவத்தின் பழைய நினைவுகளை தட்டி எழுப்பும் விதமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராக்கோ யோகேந்திரன். இப்படம் 90-ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையுடன் நன்றாக ஒத்துபோகிறது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் தேவையில்லாத நிறைய காட்சிகள் வந்து செல்கிறது.சச்சின் வாரியர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக உள்ளது.கோபி துரைசாமி ஒளிப்பதிவில் பள்ளி காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.ரம்யா சேகர் கதைக்களத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளார்.

No comments